search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் கண்டனம்"

    விண்வெளியில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தியதில் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #PMModi #SpaceScientists #MissionShakthi
    புதுடெல்லி:

    நாட்டு மக்களுக்கு இன்று மிக முக்கிய உரையாற்றப் போவதாக தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தனது உரையில் இன்று அறிவித்தார்.



    இதை விண்வெளித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை என்று அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெருமிதம் கொண்டாடிவரும் அதேவேளையில் எதிர்க்கட்சி தலைவர்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    1961-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளி திட்டம் மற்றும் பின்னர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வுத்துறை எப்போதுமே பெருமைக்குரிய சாதனைகளை படைத்து இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னெடுப்பினால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்வெளியில் தாக்கி அழிக்கும் ஆராய்ச்சி திட்டம் இன்று முழுப்பலனை தந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த சாதனைக்காக இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்களை பாராட்டுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு சர்வதேச ‘நாடக நாள்’ (1961-ம் ஆண்டிலிருந்து மார்ச் 27-ம் தேதி சர்வதேச நாடக அரங்க நாளாக கொண்டாடப்படுகிறது) வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

    செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துவது நமது விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனை. ஆனால், தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாள்களாக்க இதையெல்லாம் முன்வைத்து மற்றவர்களின் பணிகளுக்காக உரிமை கோருவதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்காள மாநில நிதிமந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிர்ஹாட் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை என பூமியில் நம்மை சுற்றியுள்ள பல பிரச்சனைகளை மறைக்கும் வகையில் இந்த நாட்டு மக்களின் கவனத்தை ஒருமணி நேரம் விண்வெளியின் பக்கம் திசை திருப்பியுள்ளார் பிரதமர் மோடி என உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    செயற்கைக்கோள் விவகாரத்தை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தும் மோடியை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி மாயாவதியும் குறிப்பிட்டுள்ளார். #PMModi #SpaceScientists #MissionShakthi
    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #AndhraGovt #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார்.

    இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

    தற்போது இந்த போராட்டத்துக்கு மொத்தம் எவ்வளவு தொகை செலவானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

    ஆந்திர அரசு செலவில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சந்திரபாபு நாயுடு தன் மாநிலத்திலிருந்து பொதுமக்களை டெல்லிக்கு அழைத்துசென்றார். இதற்காக 2 ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டது. ஆந்திர அரசே மத்திய ரெயில்வே துறையிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட ரெயில்களை முன்பதிவு செய்து ரெயில்களுக்கு வாடகையாக ரூ.1.12 கோடி அளித்தது.

    முக்கிய வி.ஐ.பிக்களுக்கு சொகுசு அறைகள், பொது மக்களுக்கு தனியாக அறைகள் என மொத்தம் 1100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதற்காக கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

    உணவு, இதர செலவு என மொத்தம் ரூ.10 கோடி செலவாகி உள்ளது. இதற்கான தொகையை 6-ந்தேதியே ஒதுக்கீடு செய்து ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 12 மணி நேர போராட்டத்துக்கு 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் நடந்த போராட்டத்திலேயே இந்தச் செலவுகள் குறித்து சந்திரபாபு நாயுடு பேசி இருந்தார். அதில், ‘இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திர அரசின் பணத்தில்தான் நடத்தப்படுகிறது.

    இது மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். ஆந்திர அரசு இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. என் மக்களின் சுதந்திரத்துக்காகவே இது நடத்தப்படுகிறதே தவிர, ஒரு தனிப்பட்ட கட்சியின் போராட்டம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். #AndhraGovt  #ChandrababuNaidu

    ×